தேர்தல் பொது நடத்தை விதிமுறைகள்
1. சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்சனைகளை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது.
2. பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால நடவடிக்கைகள் ஆகியவற்றையே விமர்சிக்க வேண்டும். வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது.
3. தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரி பார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.
4. சாதி அல்லது மத அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது.
5. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரங்களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற 'ஊழல் நடவடிக்கைகளை' கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.
6. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதரின், அமைதியான மற்றும் தொந்தரவுக்கு உட்படுத்தப்படாத வீட்டு வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும். அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு தனிநபரின் வீடு முன்பாக போராட்டம் நடத்துவது, முற்றுகை இடுவது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது.
7. ஓர் இடத்திலோ கட்டடத்திலோ சுற்றுச்சுவரிலோ அறிக்கை ஓட்டுவது, பதாகைகளைத் தொங்க விடுவது, அரசியல் கட்சி வாசகங்களை எழுதுவது, கட்சிக் கொடியைப் பறக்க விடுவது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால், அந்த சொத்தின் உரிமையாளரிடம் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும்.
8. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வேறு கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் பேச்சு, எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியோ, தங்கள் கட்சியின் துண்டறிக்கை விநியோகம் செய்தோ, தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
9. ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை ஒட்டியுள்ள இடங்களில் இன்னொரு கட்சி பேரணி செல்வதை தவிர்க்க வேண்டும்.
10. ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது