மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்த தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது முதல் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, இதில் தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகளும் அடக்கம். தற்போது அரசின் வழிகாட்டுதலுடன் கல்வி தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் மூலமும் வகுப்புகள் நடந்து வருகிறது.
இதனை பயன்படுத்தி அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வியில் மாணவர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. அதில், பள்ளி அருகில் உள்ள குடியிருப்புகளை சேர்ந்த மாணவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்ப்பதற்கு பள்ளி ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
அவ்வாறு பள்ளியில் சேர்க்கப்பட்ட அனைத்து மாணவர்களையும் எமிஸ்(EMIS) இணையத ளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்த்து, அந்த ஒளிபரப்பை மாணவர்கள் அனைவரும் பார்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அதுதொடர்பாக அனைத்து மாணவர்களுடனும் ஆசிரியர்கள் தினசரி உரையாட வேண்டும்.
இவ்விவரத்தை தினசரி குறிப்பேடுகளில் ஆசிரியர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும். கல்வி ஒளிபரப்பு குறித்து மாணவர்களுக்கு சிறுசிறு ஒப்படைவு, சிறுசிறு பயிற்சிகளை வழங்கி அதனை ஆசிரியர்கள் இணைய வழி அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடித்து பயிற்சி தாள்களை சரி பார்த்து திருத்தி, மீள்பயிற்சியும், வலுவூட்டுதல் பயிற்சியும் வழங்கிட வேண்டும்.
கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் எந்த விதமான இடையூறும் இன்றி பேரிடர் காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்ப்பதற்கு, ஆசிரியர்கள் அனைவரும் முன் வரவேண்டும். அரசின் அறிவிப்புகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அந்த வழிகாட்டல் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags (Don't Read This) :-