தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்குக்கு அவசியமில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவு. தனியார் மருத்துவமனைகளில் விரைவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும். தமிழகத்தில் தற்போது கொரோனா ஊரடங்குக்கு அவசியமில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவம் மற்றும் மருத்துவ களப்பணிகளில் உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், தமிழகத்தில் 5% தொற்று பாதிப்பு இருப்பதால், தற்போது ஊரடங்கு தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
தமிழக முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,458 இடங்களில் இந்த முகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் முனிசிபல் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்று வரும் முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 94.68% பேர்.
இதேபோல் இரண்டாவது தவணை செலுத்தியவர்கள் 85.47% பேர். தடுப்பூசி போடும் பணியினை ஒரு இயக்கமாக முன்னெடுத்ததால், தடுப்பூசி செலுத்திய சதவீதம் என்பது உயர்ந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தினசரி தொற்று என்பது சற்று உயர்ந்துள்ளதாகவும், ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் உயிரிழப்பு ஏதும் இல்லை என அவர் தெரிவித்தார்.