ஆடிப்பெருக்கு திருவிழாவை ஒட்டி நாளை தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-
"மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகளுக்கு அரசால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஆடிப்பெருக்கு(ஆடி 18) நாளான 03.08.2022(புதன்கிழமை) தேதியன்று தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனை ஈடுசெய்யும் வகையில் 27.08.2022(சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம், 1881 கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால்,
உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்"
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆடிப்பெருக்கு நாளன்று புதுமணத் தம்பதிகள், பொதுமக்கள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 21 நாட்களாக ஆற்றில் பொதுமக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப் படுகின்றனர். இந்நிலையில் காவிரி ஆறு ஆடிப்பெருக்கு அன்று களையிழந்து காணப்படுமோ என்ற அச்சம் வியாபாரிகள் இடையே எழுந்துள்ளது