கலை, அறிவியல் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பம்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடைநிலை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.


"கலை, அறிவியல் படிப்புகளில் சேர இன்று (06.05.2024)  முதல் விண்ணப்பம்"



சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர இன்று  (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் இன்று  6-ம் தேதி முதல் பதிவு செய்யலாம். 

தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ. 48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ. 2 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை, பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங், யு.பி.ஐ. மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். 

இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் இன்று 6-ம் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். 

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 24343106 / 24342911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post
Loading...