பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தயாரிப்புபணி தீவிரம்.
நெல்லை , ஜூலை 8:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மதிப்பெண் தயார் செய்யும் பணி மும்முரமாக நடக்கறது. கொரோனா வைரஸ் 2ம் அலை பரவியதால் கடந்த 2020-21ம் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட் டது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை அரசு நியமித்தபள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் தலைமையிலான குழு தனது அறிக்கையை அரசுக்கு வழங்கியது.
இதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சரா சரி) 50 சதவீதம், 11ம் வகுப் பில் பொதுத்தேர்வு (ஒவ் வொருபாடத்திலும் பெற்ற எழுத்து மதிப்பெண்) 20 சதவீதம் மட்டும், மற்றும் 12ம் வகுப்பில் செய்முறைத்தேர்வின் (பிராக்டிகல்) மதிப்பெண் 30 சதவீதம் ஆகியவை கணக்கில் கொள்ளப்படும்.
பிளஸ் 2 வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அகமதிப்பீட்டில் (10) என மொத்தம் 30க்கு பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அகமதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், 12ம் வகுப்பு செய்முறைத்தேர்வுகளில் பங்கேற்க இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11ம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப் பெண் கணக்கில் எடுத் துக் கொள்ளப்படும். 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் இரண்டிலும் பங்கு பெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 மற்றும் 11ம் வகுப்பு எழுத்துத்தேர்வுகளின் அடிப்படையில் 12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு 11ம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதாவது பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ அல்லது தேர்வு எழுத இயலாத நிலை இருந்தாலோ அவர்கள் தற்போது மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில் கொண்டு 35 சதவீத மதிப்பெண் வழங்கப்படும். 11ம் வகுப்பு எழுத்துத் தேர்வு அக மதிப்பீடு செய்முறை தேர்வு மற்றும் 12ம் வகுப்பு அக மதிப்பீடு செய்முறை தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் பணிகள் தற்போது மும் முரமாக நடந்து வருகிறது.
முதற்கட்டமாக மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதாவது 3 பாடங்களில் பெற்ற அதிக மதிப்பெண்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சரிபார்த்து அந்த விபர அறிக்கைகளை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலமாக அந்தந்த மாவட்ட தேர்வுத்துறை துணை இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இப்பணிகள் முடிந்ததையடுத்து, மாநில தேர்வுகள் துறை மாணவர்களின் 3 வகுப்புகளின் மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இப்பணியை ஓரிரு வாரங்களுக்குள் முடித்து ஒவ்வொரு மாணவரின் மதிப்பெண் விபரங்களை அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதிப்பெண் பட்டியல் வெளியான பின்னர் இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
