பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் தனியார் பள்ளிகளை திறக்க அமைச்சரிடம் கோரிக்கை
சென்னை , ஜூலை 13:
தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தலைமைச் செயலகத்திப் நேற்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதற்கு பிறகு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அளித்த பேட்டி: அமைச்சரை சந்தித்து நோய் தொற்று குறைந்து இருப்ப தால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கேட்டோம். கடந்த ஒன்றரை ஆண்டாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தான் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி 20 சதவீதம் தான் மாணவர்களுக்கு சென்றடைந்துள்ளது. அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறந்துள்ள நிலையில் தமிழகத்திலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
2020-2021ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்த்ததற்காக அரசு வழங்க வேண்டிய 1436 கோடியை விரைவாக வழங்க வேண்டும் என்றும், தற்காலிக அங்கீகாரம் முடிந்த அனைத்து பள்ளிகளுக்கும் தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக தொடர் அங்கீகாரத்தை 3 ஆண்டுகளுக்கு எந்தவிதசான்றுகளும் நிபந்தனைகளும் இல்லாமல் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்குமேல் செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு என தனியாக இயக்குநரகம் அமைக்க வேண்டும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை களைய தனியார் வாரியம் அமைக்க வேண்டும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகளை தனியார் பள்ளிகளுக்கு தனியாகவும், அரசுப் பள்ளிகளுக்கு தனியாகவும் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுள்ளோம்.